கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாநிலத்திலுள்ள டாஸ்மாக் கடைகளையும் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பாலக்கோடு அருகே சாலை வழியாக குடிபோதையில் வந்த நபரைப் பிடித்து விசாரித்த காவல் துறையினர், கரகூர், வட்டகாம்பட்டி ஆகிய பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக ஒரு லிட்டர் 1000 முதல் 1500 ரூபாய் வரை கள்ளச்சராயம் விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கரகூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (35), வட்டகானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (58) ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த 10 லிட்டர் அளவிலான கள்ளச்சாரயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் மரஹண்டஹள்ளி காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் தயாரித்த கணவன் மனைவி கைது