பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (மார்ச் 16) பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய ஜி.கே. மணி, “அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லாத நிலை உள்ளது. மக்கள் விரும்பும் அரசாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பென்னாகரம் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நகை கடன் ரத்து, சுய உதவி குழு கடன் ரத்து போன்றவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர மூன்றாவது முறையாக பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் தமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதேபோல் தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் போட்டியிடுகிறார். இவர் இன்று இண்டூா் பேருந்து நிலையம், பி.எஸ். அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இண்டூா் பகுதியின் வளர்ச்சிக்காக தனியாக ஊராட்சி ஒன்றியம் அமைக்க பாடுபடுவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய கடன் போன்ற தள்ளுபடி செய்துள்ளதாகவும் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை, இலவச எரிவாயு உருளை உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையைக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.