தருமபுரி: தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கடந்த ஐந்து தினங்களாக விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று மோட்டாங்குறிச்சி பகுதி வழியாக சென்ற அவரை பாமகவினர் தடுத்து நிறுத்தி பிரச்னை செய்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து சமாதானம் செய்து செந்தில்குமாரை அனுப்பி வைத்தார்.
திமுக-பாமக மோதல்
தொடர்ந்து பாமக சார்பில் 1987ஆம் ஆண்டு நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த சுப்பிரமணியமத்தின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யச் சென்றனர். அப்போது, அங்கு வந்த பாமகவினர் செந்தில்குமாரை சுப்பிரமணியனின் வீட்டுக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக செந்தில்குமாரை காவல்துறையினர் மீட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமரவைத்தனர்.
செந்தில்குமார் எம்பியை தடுத்து நிறுத்திய பாமக
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார் எம்பி, "வறுமையிலுள்ள சுப்பிரமணியனின் குடும்பத்தாரைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் நிதியதவு வழங்கச் சென்றேன். சுப்பிரமணியனின் சமாதி, அங்குள்ள நினைவுத்தூண் வன்னியர் சங்கத்திற்குச் சொந்தமான இடம் என தடுத்தனர். அதற்கு மதிப்பளித்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் வைத்து நிதியுதவியை அளிக்கவிருந்தேன். இதையறிந்த பாமகவினர் அக்குடும்பத்தினரை நேற்றிரவு கடத்திச் சென்றுள்ளனர். தற்போது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எப்போது, வேண்டுமானாலும், சுப்பிரமணியனின் குடும்பத்தினர் என்னிடம் வந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசன் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அன்புமணி நிதியுதவி செய்யவேண்டும்
இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாமக எதையும் செய்யவில்லை. கருணாநிதி ஆட்சியில்தான் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது, அவரை இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் 3ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து அன்புமணி ராமதாஸ் உயிரிழந்த 21 குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்தால் அதையும் வரவேற்போம்" என்றார்.
இதையும் படிங்க: நிதி ஒதுக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்திய தருமபுரி ஊராட்சி மன்றத் தலைவர்கள்!