தருமபுரி: நான்கு ரோடு அருகில் நவீன வசதிகளுடன், ஆவின் பாலகம் பூங்கா வசதியுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகத்திற்கு காலை, மாலை, இரவு நேரங்களில் டீ மற்றும் காபி, பால் அருந்துவதற்கு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து, பூங்காவில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகப் பூங்காவில் மின்விளக்கு எரியாமல், போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளது. இதனையறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், காலையிலே ஆவின் பாலகத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாலகத்திற்கு முன்பு சுகாதாரமற்ற முறையில் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தானே அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட ஆவின் ஊழியர் ஒருவர் வந்து, அந்த இடத்தை சுத்தம் செய்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் ஊழியருக்கு உதவியாகச் சுத்தம் செய்ய உதவினார். இதனையடுத்து இந்த நவீன ஆவின் பாலகத்தை நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
அதேபோல் பூங்காவை சீர் செய்து சிறுவர்களும், பொதுமக்களும் அமரும் வகையில் சுகாதாரமாகப் பாதுகாத்து, தேவையான மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் ஆவின் பாலகத்தை ஆய்வு செய்ய வந்த சட்டமன்ற உறுப்பினர், தானே பாலகத்தைச் சுத்தம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை பணிகளை தொடங்கிவைத்த கலெக்டர்