தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் நடைபெறும் தொகுதிகளின் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாஸும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனும், அன்புமணியான நானும் என இரண்டு அன்புகளும் இணைந்து செயல்பட்டு தர்மபுரி மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக மாற்றுவோம்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் இம்மண்ணின் மைந்தன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். செந்தில்குமார் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட, சேலம் மேட்டூர் பகுதியில் வாக்கு கேட்க மாட்டாரா? தொகுதியில் பிறந்தவர்தான் போட்டியிட வேண்டும் என்றால், செந்தில்குமாரின் தலைவர் ஸ்டாலின் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் தொகுதியில்தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்? ஸ்டாலினின் தங்கை கனிமொழி ஏன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்?", என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக நாங்கள் போராடி வருகிறோம். எனவே கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேட்டூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, பாமக தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.