தருமபுரி: தமிழ்நாட்டில் தக்காளிக்கென்று பிரத்யேக சந்தை பாலக்கோட்டில் அமைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தக்காளிகளை இச்சந்தையில் விற்பனை செய்துவருகின்றனர்.
இச்சந்தையிலிருந்து நாமக்கல், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாலக்கோடு ஜிட்டாண்டஹள்ளியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட தக்காளி கமிஷன் மண்டிகளிலிருந்து பெங்களூரு, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி பயிரிட்ட விவசாய நிலங்களில் நீர் தேங்கி வேர் அழுகி தக்காளிச் செடிகள் வீணாகின. இதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக கொள்முதல் விலையும் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.
பாலக்கோடு தக்காளி சந்தையில் முதல் தரம் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 1500 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல்செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் விற்பனை விலையாக வெளிச்சந்தையில் கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெளிமாவட்டங்களில் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்பொழுது மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியதால் தக்காளி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தக்காளி விலை உயர்வு இன்னும் இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்றும், புதியதாக தக்காளி பயிரிட்டு அதிலிருந்து தக்காளி மகசூல் வரும்பொழுது மட்டுமே விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தக்காளி திடீர் விலை உயர்வு (Tomato Price Hike) விவசாயிகளுக்கு கூடுதல் லாபத்தைத் தந்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இருப்பினும் விற்பனை விலை கிலோ 20 ரூபாயிலிருந்து 120ஆக உயர்ந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.
ஆப்பிள் விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் தக்காளி விலை ரூ.120 எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காய்கறிகள் விலை ஏற்றம்: வியாபாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை