தருமபுரி: பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான காணும் பொங்கல், தருமபுரி மாவட்டம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான, ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர். இவர்களுடன் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட ஒகேனக்கலுக்கு வந்துள்ளனர்.
எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி பகுதிகளிலும், பாதுகாப்பாக ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் குளித்து மகிழ்கின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (17.01.23) காலை நிலவரப்படி விநாடிக்கு சுமார் 2000 கனடியாக தண்ணீர் வரத்து உள்ளது.
மிதமான தண்ணீர் வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். காணும் பொங்கலை குடும்பத்துடனும், உறவினர்களுடனும் குதூகலமாய் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒகேனக்கலில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!