ருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி ஊராட்சியின் செயலராகப் பணியாற்றியவர், கருணாகரன் (51). இவர், 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் ஊராட்சி நிதியை போலி ஆவணம், அலுவலர்களின் பெயரில் போலி கையெழுத்திட்டு முறைகேடு செய்துவந்துள்ளார். முறைகேட்டுக்கு அவரது நண்பரான பாப்பிரெட்டிப்பட்டி குமார் (41) என்பவர் உதவியுள்ளார்.
முறைகேடு தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு அறிக்கை அளித்தார். அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு அனுப்பி ஆட்சியர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவிட்டார்.
குற்றப்பிரிவு டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினரின் விசாரணையில் ஊராட்சி செயலர் கருணாகரன் தன் நண்பருடன் இணைந்து தொடர்ந்து 20 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.
காவல்துறையினர் முறைகேட்டில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்து, அவர்களின் வீடுகளிலிருந்து அலுவலர்களின் பெயரில் பயன்படுத்திய போலி முத்திரைகள் உள்ளிட்ட உபகரணங்களைப் பறிமுதல்செய்தனர்.
மேலும், இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று இருவரையும் சிறையில் அடைத்தனா்.