கோடைவெயிலின் தாக்கத்தால், வன உயிரினங்கள் தண்ணீர், உணவுத் தேடி வனப்பகுதியிலிருந்து சாலைகை்கு வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் வன உயிரினங்களை வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் பகுதிகளில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் அதிகளவு மான்கள் உள்ளன. சிலர் இரவு நேரங்களில் மான்களை வேட்டையாடி, அவற்றின் மாமிசங்களை விற்பனை செய்து வருகின்றனர். சட்டத்திற்குப் புறம்பாக மான்களை வேட்டையாடி அதன் மாமிசங்களை விற்பனை செய்பவர்களை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மான்கறி விற்பனை செய்ததாக இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ மான்கறி பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (50), ஆனந்தன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வன உயிரினங்களுக்கு வனப்பகுதியில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தால், வன விலங்குகள் வெளியே வருவது தடுக்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.