தர்மபுரி: நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ரபையன அள்ளி என்ற ஊராட்சியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை 100% தவிர்த்து நெகிழி இல்லா ஊராட்சியாக மாற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் சிலம்பரசன் தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும்; அதற்கு முன்னுதாரணமாக தர்மபுரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊராட்சி இணைந்து நெகிழி இல்லா எா்ரபையனஅள்ளி விளங்கும் எனத் தெரிவித்தனர்.
விழிப்புணர்வின் முதல் பணியாக 2500 குடும்பங்களுக்கு ‘மஞ்சப்பை’ வழங்கும் திட்டத்தை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார் பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் கிருமி நாசினி வழங்கி தொடங்கி வைத்தார். கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக்கினைப் பயன்படுத்தமாட்டோம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் நிழல் இல்லாத நாள் நிகழ்வு