தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி ஊராட்சியில் கீரைப்பட்டி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், தாதராவலசை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமதுரை கிராமத்தில் அரசு நியாயவிலைக் கடை செயல்பட்டுவருகிறது. இதில் தாதராவலசை, வாழைத்தோட்டம், வள்ளிமதுரை மூன்று கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் இணையதள வசதியுடன் பயோமெட்ரிக் முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமதுரை கிராமத்தில் இணையதள வசதி கிடைக்காததால், நியாயவிலைக் கடையில் பொருள்களை வழங்க முடியாமல் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பயோமெட்ரிக் எந்திரத்தை எடுத்துக்கொண்டு பொருள்கள் வாங்கும் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு இணையதள வசதியை தேடி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு, இயந்திரத்தை எடுத்து அலைந்து சென்றுள்ளார்.
சில நேரங்களில் 3 கிலோமீட்டா் தூரம் சென்று இணையதள சிக்னல் கிடைக்கும் நிலை உள்ளது. குடும்ப அட்டைக்கு பொருள்கள் வாங்குவதற்கான ரசீதை பெறுவதற்கு பொதுமக்களும் விற்பனையாளரும் தொடர்ந்து அலைந்து திரிகின்றனர்.
இதனால் பொருள்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு நாள் ரசீது வழங்குவதும், அடுத்தநாள் பொருள்களை விநியோகம் செய்வதும் என்று இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இணைய வசதிக்காக சாலையோரம் அமர்ந்து பொருள்கள் வாங்குவதற்கான ரசீதை பெறுவதற்காக கூடிநின்ற மக்கள், அந்த வழியாக சென்ற அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமாரிடம் இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என முறையிட்டனர். அப்பொழுது கூட்டுறவுத் துறை அலுவலர்களிடம் பேசினார். அதன் பிறகு விரைவில் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக பொதுமக்களிடம் சம்பத்குமார் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 10 புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நியமித்தது!