தருமபுரி: நல்லம்பள்ளி அருகே புகழ் பெற்ற செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை இன்று (நவ.7) நடைபெற்றது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர், ஓமலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்காக வந்த நிலையில், ஆடுகளின் விலை கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் விலை உயர்ந்து விற்பனையானது. ஆடுகளுக்கு 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது. மேலும், வளர்ப்பு ஆட்டுக்குட்டிகள் 2,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை விற்பனை ஆகியுள்ளது.
இது குறித்து ஆடு விற்பனையாளர் ஒருவர் பேசுகையில், “ஆடு ஒன்றுக்கு நுழைவுக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கின்றனர். ஆடு விற்பனை ஆனாலும், ஆகவில்லை என்றாலும் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் வியாபாரம் ஆகாத விவசாயிகள், ஆடுகளை சந்தைக்குக் கொண்டு வரும் வாகனச் செலவு மற்றும் சுங்க கட்டணத்தால் கிடைத்த பணத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் அதிக விலையில் விற்பனைக்கு வந்ததால், வியாபாரிகள் குறைந்த அளவிலேயே ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று இரவு பெய்த மழை காரணமாக, சந்தைப் பகுதியில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதன் காரணமாகவும் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
மேலும், “கடந்த வாரம் ஆடுகளின் விலையை விட இந்த வாரம் 1,000 ரூபாய் அதிகரித்துள்ளது. சேலம், மேச்சேரி, மேட்டூர் என அனைத்து பகுதிகளில் இருந்தும் 5,000 ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. குட்டி ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகி வருகின்றது” எனத் தெரிவித்தார், ஆடு வியாபாரி சுப்பிரமணி.
சந்தையில் விற்கப்பட்ட ஆடுகள் 5 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆடுகள் வாங்க குவிந்ததால், சுமார் 2 கோடி ரூபாய் அளவில் ஆடு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த மாலுமியின் உடல் உறுப்புகள் தானம்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!