தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், "தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இத்திட்டங்களுக்கான நிதிகளை மத்திய அரசும், மாநில அரசும் ஒதுக்கீடு செய்து வழங்கிவருகின்றன. அரசின் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியும், மக்களுக்கான வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டுவருகின்றன. அத்தகைய அரசின் திட்டங்களை துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறப்பாகப் பணிகளை நிறைவேற்றிட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு சுகாதாரமான கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், 350-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அரசுப் பள்ளியில் அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரமான கழிப்பிட வசதி ஏற்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சுகாதாரமான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பள்ளிகளில் இடைநிற்றல் சூழ்நிலை ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.