தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சந்தாரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருப்பது வழக்கம்.
இன்று ஆடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பதற்கு பட்டிக்குள் சென்ற அவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தன. மேலும், ஒருசில ஆடுகள் பலத்தக் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக வனப் பகுதியில் இதுபோன்று மர்ம விலங்குகள், உணவுதேடி விவசாய நிலங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்குவது வழக்கமாக இருந்துவருவதாக அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு நுழைவதைத் தடுப்பதற்கு, வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நடுரோட்டில் படுத்துக்கொண்ட சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்