தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் இன்று (டிச.19) புதிய மருத்துவத்துறை கட்டடங்களைத் திறந்து வைத்தும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் அதிக கன மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு, அதற்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், தென் மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
இந்த நான்கு மாவட்டங்களில், 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மழை நீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த மழை நீரை மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றி, தற்போது அங்கு நீர் வடிந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தளம் வரையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக அரசு உடனடியாக அங்கு மருத்துவ கல்வி இயக்குனரை (DME) அனுப்பி வைத்து, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அங்கு தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் போன்று, தென் மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று (டிச.19) காலை முதல் 190 நடமாடும் மருத்துவக் குழுக்கள் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளைக்கும் தேவைக்கு ஏற்ப ஒரு இடம் அல்லது இரண்டு, மூன்று இடங்களில் முகாமிட்டு, அங்குள்ள மக்களுக்கு மழைக்கால நோய்கள் வராதவாறு மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றனர்.
மேலும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் போன்ற அண்டை மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரும், அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தென்காசியில் 21,262 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்"- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்