தமிழ்நாடு அரசு ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆன்லைன் முறையில் செயல்படுத்திவருகிறது. பொதுமக்கள் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் முதியோர் உதவித்தொகை சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் கிராம நிர்வாக அலுவலர்கள் அதனை பரிசீலனை செய்து வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினிகளை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கிவருகிறது.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் 197கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 49லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.பி அன்பழகன் ”அரசின் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்த முதியோர்களுக்கு கருணை உள்ளத்துடன் அவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று நேரடியாக விசாரணை செய்து தகுதியான நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் உதவி புரிய வேண்டும்”. என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.