தர்மபுரி: அரூர் அடுத்த சித்தேரி மலைக்கிராமத்தில் உள்ள நலமங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காரியராமன். இவரது மனைவி கண்ணகி. குடிபோதையில் இருந்த காரியராமன் தனது மனைவி கண்ணகியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையறிந்த மகன் ஏழுமலை தந்தையை கண்டித்துள்ளார். அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த காரியராமன், வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மகனை சுட்டுள்ளார்.
ஆனால், ஏழுமலை நகர்ந்ததால், துப்பாக்கி குண்டுகள் சுவற்றில் பட்டு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ரவி (13), சாரதி (12), பிரபாத் (11), திருமலைவாசன் (16), அனிதா (13) ஆகிய 5 சிறுவர்கள் மீது பட்டது. இதில் 5 சிறுவர்களின் கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சிறுவர்களை மீட்டு, சித்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக 5 சிறுவர்களையும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவர்களின் கை மற்றும் தோள்பட்டையில் இருந்த பால்ஸ் குண்டுகளை மருத்துவர்கள் அகற்றினர். மேலும் துப்பாக்கி குண்டுகள் நேரடியாக பாயாததால் சிறுவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறுவர்கள் தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காரியராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளத்தின் நடுவே பரிசலில் பயணிக்கும் பழங்குடியின மக்கள்..