தருமபுரி மாவட்டம் பென்னாகரம் - பாப்பாரப்பட்டி சாலையில் மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 2,000 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர்.
இம்மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு வசதியாக முறையான பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு மாலை நான்கு மணியளவில் 18, 43 தடம் எண்கள் கொண்ட இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு முன்பே மாணவர்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஓடுவது போல வேகமாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறும் அவலம் தினமும் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மாணவர்களுக்கு கூட்டத்தில் தடுக்கி கீழே விழுந்து காயங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் இன்னும் கூடுதலான பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்பதே மாணவ மாணவியரின் வேண்டுகோளாக உள்ளது.