தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் பண்ணப்பட்டி என்ற இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள், பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் வனப்பகுதியிலுள்ள சுண்டைக்காய் பறித்தல், புளி அடித்தல், தேன் எடுத்தல், விறகு ஒடித்தல், கிழங்கு வெட்டுதல் உள்ளிட்ட தொழில்களை செய்து, இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பம் நடத்திவருகின்றனர்.
இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இந்த மக்களை வனப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, இவர்களுக்கு பென்னாகரம் பகுதியில் அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. ஆனால் வனப்பகுதியை விட்டு வெளியே வந்தால் தங்களது வாழ்வாதாரத்திற்காக எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாத நிலையில் இருப்பதால், இவர்கள் வனப் பகுதியிலேயே தொடர்ந்து வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வறட்சி காரணமாக வனப்பகுதியில் போதிய அளவிற்கு வருவாய் கிடைக்காததால், இருளர் இன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மிகுந்த சிரமப்பட்டுவந்துள்ளனர்.
இதனால், வனத் துறையினர் தங்களுக்கு மாமூல் கொடுக்காவிட்டால் வனப்பகுதியை விட்டு வெளியேறுங்கள் என வற்புறுத்தி உள்ளனர். தொடர்ந்து, இந்த மக்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதால், மீண்டும் வனத்துறையைச் சார்ந்தவர்கள், அந்தப் பகுதிக்கு வந்து, அவர்களை மிரட்டி வீட்டருகில் இருந்த மூன்று நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், தொடர்ந்து வனத்துறையை விட்டு வெளியேறாவிட்டால், "உங்களையும் இதுபோன்று சுட்டுக்கொல்லப் போகிறோம்" என மிரட்டியுள்ளனர். இதனால், தங்களை வனப்பகுதியில் வாழ்வதற்கு, வனத் துறையினருக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.
அதே போல், தங்களை மிரட்டி பணம் கேட்கும் வனத் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பண்ணப்பட்டி இருளர் இன மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர்.