கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரது மனைவி பிரியா (24). இவர் பிரசவத்திற்காக பாரூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏதும் ஏற்படவில்லை என்று கூறி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
அதையடுத்து, தருமபுரி மருத்துவமனையில் 30ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சுகப்பிரசவ முறையில் பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், பிரியா இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் பிரசவத்தின்போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதும்தான் இறப்புக்குக் காரணம் என்று தெரிவித்து பிரியாவின் உறவினர்கள் சடலத்தைக் கைப்பற்றி தருமபுரி சேலம் சாலையில் மறியல் செய்ய சடலத்தை வேகமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். இதையறிந்த காவல் துறையினர் பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும், போராட்டம் நடத்தாமல் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம், உயிரிழந்த கர்ப்பிணி பிரியாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டு, மருத்துவமனை முதல்வருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சுகப்பிரசவத்திற்குப் பிறகு உயிரிழந்த தாய்: மருத்துவமனையில் நடந்தது என்ன?