அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி அதிமுக சார்பில், பெரியார் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை அதிமுகவினர் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் தர்மபுரி நான்கு சாலைப் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "ஏற்கனவே தர்மபுரியில் சிப்காட் அமைக்க 1,783 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தில் 580 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. அதைக் கையகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தைச் செயல்படுத்த தாமதமாவதால், முதற்கட்டமாக அரசு நிலத்தில் 1203 தொழிற்பேட்டை அமைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், "ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது, அதன் உபரி நீரை பென்னாகரம் அருகே உள்ள கெண்டையான் குட்டை ஏரிக்கு நிரப்பி, அதை மாவட்டத்தில் உள்ள மற்ற ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தை ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை கென்டையான் குட்டை ஏரிக்குக் கொண்டு வர அரசு ஆய்வுகள் செய்யும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்று நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மொரப்பூர் இடையேயான ரயில் பாதை இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்தத் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்திக் கொடுக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "ஏற்கனவே இருப்புப்பாதை இருந்த இடத்தில், சுமார் 8 கி.மீ., மட்டும் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான கோப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்ட பின்பு பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
தர்மபுரியில் 807 ஏக்கர் பரப்பளவில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று நிறைவுசெய்தார்.