தருமபுரி: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் ஆற்றில் குளிக்கவும், அருவிப் பகுதிக்குச் சென்று குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவு பிறப்பித்தார்.
நீர்வரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வருவதால் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை நீடித்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சுற்றுலாப் பயணிகளை ஆற்றுப் பகுதி மற்றும் அருவி பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மழை குறைந்ததால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனிடையே, தொடர்ந்து இன்று (மே.20) காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.

இதனால் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைமேடை, பிரதான அருவிகள் மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாற்றில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது இதுவே முதல் முறை. இதனால் காவிரி ஆற்றில் ஊட்டமலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தைக் கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறையைக் கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சென்று வரும் நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி: மனைவியுடன் சென்று தொடங்கி வைத்த ஸ்டாலின்