தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இன்று (ஜூன் 14) சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவருமான ஜி.கே. மணி கூறியதாவது, "பென்னாகரம் பகுதி மக்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் தவறாமல் நடந்து கொள்வேன்.
பென்னாகரம் தொகுதி மற்றும் ஒட்டுமொத்த தருமபுரி மாவட்டத்திற்கு முக்கிய தேவையாகவும், மக்களின் வாழ்வாதாரம், வளர்ச்சித் திட்டமான ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டம் கொண்டுவர சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முயற்சி எடுக்கப்படும்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம்
பென்னாகரம் தொகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. அதனை புத்துயிரூட்டி ஒட்டுமொத்த தருமபுரி மாவட்ட மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்படும். கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்.
கரோனா தொற்றால் உயிரிழந்த பலருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. உண்மையான காரணத்தை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.
பால் கொள்முதலுக்கு உரிய விலை
ஊரடங்கு காலத்தில் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் பால் விலையை குறைத்து உள்ளனர். ஒரு லிட்டர் 12 ரூபாய் வரை குறைத்துள்ளனர்.
இதனால் கிராமப்புறத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு பால் கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.