தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலரின்நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, வனச்சரக அலுவலர்கேசவன் தலைமையில் ஏழுபேர் கொண்ட வனக்காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குட்டிராயன் என்ற வண்ணாத்தி காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 35 கிலோ மான் இறைச்சியும் இருந்ததது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை விசாரித்ததில் பென்னகாரம் போடூர் இருளர் காலனியைச் சேர்ந்த சித்தன் மகன் மாதேஷ்(26), மாதன் மகன் காவேரியப்பன்(26), குஞ்சப்பன்(35) என்பதும், இவர்கள் வனப்பகுதிக்குள் வேட்டையாடியதும் தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, 35 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்து மாவட்ட வன காவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.