தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி கிராமத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு செய்த ஐந்தாயிரத்து 120 பேருக்கு அரசின் நிவாரணப் பொருட்களை மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டிய உயர் கல்வித் துறை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் எப்பொழுது நடத்தப்பட்டாலும், அவற்றிற்கு கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் தயார் நிலையில் இருக்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.
’கல்லூரிகள் எப்பொழுது தொடங்கப்பட்டாலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டப் பின்னரே, 2020- 2021ஆம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் நடத்தப்படும்’ எனக் கூறிய அவர், மாணவர்கள் தேர்விற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், மாநிலத்தின் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அந்தப் பாடத்திட்டங்கள் நடத்த வாய்ப்பில்லை எனக்கூறினார்.
நடத்தி முடிக்கப்பட்ட பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அவற்றை சம்பந்தப்பட்ட பேராசியர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மே 3ஆம் தேதிக்குள் கரோனா கட்டுக்குள் வரும் - எஸ்.பி. வேலுமணி