தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா (48). இவர் கரோனா தொற்று காரணமாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரது கணவர், மகன் ஆகியோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சந்திரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சந்திராவின் இறப்பு குறித்து தர்மபுரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுசீந்திரனுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.
சந்திராவின் கணவர், மகன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ள முன்வராத காரணத்தால், சந்திராவின் சடலத்தை சுசீந்திரன் நகராட்சி மின் மயானத்திற்குக் கொண்டு சென்று முறைப்படி சடங்கு செய்து எரியூட்டினார்.