தர்மபுரி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் மாதையன். இவரது பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலி ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி, அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாக, மாதையனின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
நூதன மோசடி
ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபர், மாதையனின் உறவினர் கோவிந்தனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதனுடன் பணம் அனுப்ப ஒரு தொலைபேசி எண்ணையும் அனுப்பி உள்ளார். அந்த எண்ணைப் பதிவு செய்து கூகுள் பே-யில் சோதித்தபோது, முகேஷ் மூர்த்தி என்ற பெயர் காட்டியுள்ளது.
தொடர்ந்து, மாதையனின் உறவினர் கோவிந்தன், முதலில் ஒரு ரூபாய் அனுப்பி சோதனை செய்துவிட்டு, அந்த எண்ணை இணைத்துள்ள எண்ணுக்கு சுமார் 51 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். இந்தத் தொகையை அவர் மூன்று தவணைகளாக அனுப்பியுள்ளார்.
அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்தி..
இதைப் போலவே, அந்த அடையாளம் தெரியாத நபர் பலருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி பண கேட்டுள்ளார். சிலர் அதனை நம்பி பணம் அனுப்பியுள்ளனர். பணம் அனுப்பியவர்களில் சில மாதையனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் அனுப்பியதை உறுதி செய்தபோதுதான், தன் பெயரில் அரங்கேறிய மோசடிகளை மாதையன் அறிந்துகொண்டார்.
போலி கணக்கு தொடங்கியவர்கள் மீது புகார்
இது தொடர்பாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதையன், தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தன் பெயரில் பணம் கேட்டு வரும் எந்த குறுஞ்செய்திகளையும் நம்பி, நண்பர்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அடங்க மறுக்கும் மதுப்பிரியர்கள்: சேலம் முழுவதும் 268 நபர்கள் கைது