தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட 183 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உயர்க்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், "தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து வட்டங்கள் இருந்தன. தற்போது காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய இரண்டு புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் ஏழு வட்டங்கள் உள்ளன. இந்த ஏழு வட்டங்களிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மூலம் ஏழாயிரத்து 743 பேருக்கு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளை அனைத்து துறை அரசு அலுவலர்களும் சிறந்த முறையில் தேர்வு செய்துள்ளனர். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசின் கடமை. தருமபுரி மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா மற்றும் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. முதியோர் உதவித்தொகை, திருமண நிதி உதவித் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: கஸ்டடி மரணங்களை மறைத்து தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்' - ஸ்டாலின்