தர்மபுரி: மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்களில் 4 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஐந்து முதல் பத்து நாட்கள் எடுத்துக் கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் நபர்,
தனது பெயர் மாரிமுத்து என அறிமுகப்படுத்தி கொள்கிறார். அவர் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாளையம்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 18ஆம் தேதி கரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளார். ஒன்பது நாட்கள் கடந்தும் அந்த பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை. இதற்கிடையில், அவரது மனைவிக்கும் கரோனா அறிகுறி தென்பட்டதாக வீடியோவில் மாரிமுத்து குறிப்பிடுகிறார்.
இதையடுத்து, மாரிமுத்து தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்துள்ளார். அதில், இவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து, மாரிமுத்துவின் மனைவி, தாய், சித்தி உள்ளிட்டோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவருக்கு பரிசோதனை முடிவு உரிய நேரத்தில் வெளிவராததால், 3 பேருக்கு தொற்று பரவிய அவலம் பாளையம்புதூர் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொற்றைக் கண்டறிந்து பரவலைத் தடுக்க கரோனா தெற்று பரிசோதனை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகம் முடிவுகளை உடனடியாக மக்களுக்கு தெரிவித்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை