கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் அணைகளில் இருந்து சென்ற வாரம் 2 லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
பின்னர் மழையின் அளவு குறைந்ததால், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு சென்ற வாரம் 19,000 கன அடியாக சரிந்தது. தற்போது மீண்டும் கர்நாடகப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறப்பு அதிகரித்து, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.
சென்ற வாரங்களில் ஒகேனக்கலில் வந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவிக்கு செல்லக் கூடிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு கம்பிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது இதற்கான சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. ஆனால், நடைமேடை பகுதியில் சுமார் ஒரு அடி தண்ணீர் செல்வதால் சீரமைப்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 12ஆவது நாளாக தடை நீடிக்கிறது.