தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 21 மாணவ,மாணவியருக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் தன் சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு புதியதாக கொண்டுவந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மருத்துவ படிப்புக்கான உபகரணங்கள் புத்தகங்கள், நிதி உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த 6 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு காரணமாக, 410 பேர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு பயிலும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு அனைத்து மாணவர்களுக்கும், 14 வகையான கற்றல் பொருட்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது. இது போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
உயர்கல்வித் துறை சார்பில், 85 புதிய அரசு கல்லூரிகளும், 1664 புதிய பாடப் பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவு உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்திய அளவில் 28.3 விழுக்காடு மட்டுமே உயர்கல்வி பயின்று வரும் நிலையில், தமிழ்நாட்டில், 49 விழுக்காடு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு வழங்கிய நீட் பயிற்சியில் 164 மாணவர்கள் சேர்ந்து பயன் பெற்றனர். இதில் 43 பேர் தகுதி பெற்று அதிலிருந்து 21 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 11 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவ கல்வி பயிற்சி பெற்ற மாணவர்களில் 50 சதவீதம் பேர் அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் மருத்துவக் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த 21 மாணவ மாணவியருக்கு மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டுகள் என ஆண்டுக்கு ரூ. 20000 எனது தாய் தந்தை பெயரில் உள்ள சரஸ்வதி பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும்"என்று பேசினார்.
இதையும் படிங்க: பள்ளி கட்ட ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்: தொழிலதிபருக்கு கிராம மக்கள் பாராட்டு!