தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை ’2D எண் 62ஐ’-யின்படி நகராட்சிக்கு 509.16 ரூபாயும், பேரூராட்சிக்கு 432.16 ரூபாயும், ஊராட்சிக்கு 355.16 ரூபாயும், உயர் தண்ணீர் தொட்டி பணியாளர்களுக்கு 432.16 ரூபாயும் தினக்கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், 01.10.2017 முதல் நிலுவைத் தொகையை வழங்கிடவும், நகராட்சி துப்புரவுப் பணியைத் தனியாருக்கு வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், பல ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியில் தினக்கூலியாக உள்ள தொழிலாளர்களை நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி அச்சங்கத்தின் தலைவர் கலாவதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.