தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மற்றும் அர்ஜுனன் குடும்பத்தினருக்கு விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டது. இதில் தங்கவேல் குடும்பத்தினர் தங்களது விவசாய நிலத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்தனர். இதனால் அர்ஜுனன் குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு செல்ல வழியில்லாமல் தவித்தனர்.
இது குறித்து வருவாய் துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விவசாய நிலத்திற்கு செல்வதற்காக அர்ஜுனன் குடும்பத்தினருக்கு பாதை விடுவது குறித்து தங்கவேல் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், மூன்று நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், வருவாய் துறை அலுவலர்களுடன் சிடுவம்பட்டி கிராமத்திற்குச் சென்று, இருதரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டார். பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அர்ஜுனன் குடும்பத்திற்கு நடைபாதை விடுவதற்காக வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ள மூன்று வழிமுறைகளின்படி பாதை அமைக்க அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாளை மாலைக்குள் பாதை விடுவது குறித்து தங்களது குடும்பத்தில் ஆலோசனை செய்து தெரிவிப்பதாக தங்கவேல் குடும்பத்தினர் மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:'இந்து மக்களின் நம்பிக்கைக்கு துணை நிற்போம்' - திமுக எம்பி செந்தில்குமார்