தருமபுரி: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த தேவரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (50) இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் விஜய், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகளை கொள்ளை அடித்தது சம்பந்தமாக கோயமுத்தூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி இரவு கோயம்புத்தூர் காவல்துறையினர் தேவரெட்டியூரில் உள்ள வீட்டிற்கு வந்து விஜய்யின் தந்தை முனிரத்தினத்தை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது விஜய் வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 செல்போன்கள், 38 கிராம் நகையை வீட்டில் இருந்ததாக முனிரத்தினம் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனைத்தொடர்ந்து, கோவை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்த பின்பு, அவரை நேற்று மாலை விடுவித்தனர். மேலும், முனிரத்தினத்திடம் குற்றவாளி விஜய்யை ஒப்படைக்குமாறு எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்பைடர் மேன் போல் மாடிக்கு மாடி தாவிய கொள்ளையன்.. ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் கோவை துணை ஆணையர் சந்தீஸ் அளித்த பிரேத்யேக தகவல்!
கோவை காவல் துறையினர் முனிரத்தினடம் விசாரணை நடத்தும்போது, அவரை கடுமையாக அவரை தாக்கியதாகவும், இதில் மனமுடைந்த முனிரத்தினம் நேற்றிரவு (டிச.6) தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மாரம்மாள் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில், காவல்துறையினரின் விசாரணையின் போது அடித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உடற்கூராய்வு முடிந்தப் பிறகு, அவரது சொந்த ஊரான தேவரெட்டியூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 4.600 கிராம் எடையுள்ள 575 பவுன் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையின் ஒருபகுதியாக, 400-க்கும் மேலான சிசிடிவிகளை ஆராய்ந்து பார்த்ததில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவருக்கு அவரது மனைவி தான் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட மூளையாக செயல்பட்டு உதவினார் என்பதை கண்டறிந்த போலீசாரை அவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜய்யை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம்; கொள்ளை அடிக்கப்பட்டதில் 95% நகைகள் மீட்பு!