தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு தக்காளி சாகுபடி செய்கின்றனர். மாவட்டத்தில் மிகப் பெரிய தக்காளி சந்தை பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ளது.
பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுபமுகூர்த்த தினங்கள் வருவதையொட்டி தக்காளியின் விலை கடந்த சில தினங்களை விட உயர்ந்து விற்பனையாகிறது.
சென்ற வாரம் ஒரு கிலோ தக்காளி 18 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்கறி கடைகளில் தக்காளி கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. தக்காளி விலை உயர்வு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தக்காளி விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை கிலோ 70 ரூபாய் வரை விற்பனையானது. கரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறைந்த அளவு நடைபெறுவதால், குறைந்த அளவு விலை உயர்ந்து விற்பனையாகிறது. சந்தையில் இருந்து ஏற்றுமதி குறைந்ததன் காரணமாக 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை தக்காளி விற்பனை நடைபெறுகிறது எனத் தெரிவித்தனர்.