தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவில், "மொரப்பூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாதி சான்றிதழ் இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக தவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் வழங்காமல் அலுவலர்கள் இவர்களை அலைகழித்துவருகின்றனர். தாங்கள் உறவினர் லட்சுமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு தருமபுரியில் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
ஆனால் எங்கள் பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மட்டும் சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். பிள்ளைகள் பட்டப்படிப்பு வரை படித்து சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல இயலாமல் கொத்தனார் வேலைக்கு செல்கின்றனர்.
எனவே தங்கள் குடும்பத்தினருக்கும் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துப் பிரச்னை காரணமாக தொழிலாளி தீக்குளிக்க முயற்சி