தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எச்.புதுப்பட்டியில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா மற்றும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுக ஆட்சி ஓரிரு வாரங்களில் கலைந்துவிடும் என்று தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்து வந்தார். ஆனால் பொதுமக்கள் ஒத்துழைப்போடு 4 ஆண்டுகள் முழுவதும் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்த திமுக ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த விதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
நான் போட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டுகிறார். அனைவரும் கூறுவது போல் ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையைத்தான் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நகரங்களுக்கு இணையான திட்டங்களை கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தியது. வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
குடி மராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டும் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், கல்வி கடன் ரத்து, உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. கூட்டுறவு வங்கிகளில் 48 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்த ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி 5 சவரன் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து தற்போது மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். தற்போது 13 லட்சம் பேருக்குதான் நகை கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் ஏழை மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு லஞ்சத்தில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தர்மபுரி மக்களின் விநோத நம்பிக்கை: மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி!