தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏலகுண்டூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் விவசாய கிணற்றில் யானை பிளிறும் சத்தம் இன்று (நவ. 19) அதிகாலையிலிருந்து கேட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் விவசாய கிணற்றில் பார்த்தபோது, கிணற்றுக்குள் யானை ஒன்று இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்ட யானையை மீட்கும் பணியில் அதிகாலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த யானை பஞ்சப்பள்ளி காப்பு காட்டில் இருந்து வெளியேறி, உணவு தேடி வந்தபோது இரவு நேரத்தில் அருகில் கிணறு இருந்தது தெரியாமல் விழுந்துள்ளது எனக் கூறப்படுகிறது .
கிணற்றில் விழுந்த யானைக்கு 12 வயது இருக்கும் எனவும், பெண் யானை என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாததால் 50 அடி ஆழத்தில் யானை உள்ளது. கிணற்றின் அருகே சாய்வாக பாதை அமைத்து யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு