தருமபுரி: பாப்பிரெட்டிபட்டி அடுத்த தென்கரைக்கோட்டை ஏரி அருகே புதிதாக அரசு மதுபான கடை அமைக்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் பெண்கள் அரசு மதுபான கடை அப்பகுதியில் வந்தால், பெண்கள் அந்த வழியாக செல்வதற்கும், பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்பு முடிந்து வருவதால், மது பிரியர்களால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறினர்.
இந்நிலையில், மது கடைகளை அமைக்க கூடாது என அரசுக்கு மனு அளித்துள்ளனர். தற்போது எதிர்ப்பை மீறி தென்கரைக்கோட்டை பகுதியில் மதுபான கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மதுக்கடை அமைக்க கூடாது என போராட்டம் நடத்துவதற்காக துண்டறிக்கை அச்சிட்டு காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
இதற்கு பதிலாக மதுக்கடை வேண்டும் எனக் கூறி ஒரு தரப்பினர் துண்டறிக்கையை அச்சிட்டு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் காவல்துறை அதிகாரிகள் மதுக்கடை வேண்டும் என்று அனுமதி கேட்டவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனை அடுத்து நேற்று(ஆக.31) காலை மது கடைய அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், தென்கரைக்கோட்டை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மது கடை அமைந்தால் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இந்த மதுக்கடையை அமைக்க கூடாது என முழுக்கங்களை எழுப்பினர். ஆனால் மற்றொரு தரப்பினருக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், மதுக்கடை வேண்டும் என்று மதுபிரியர்கள் சிலர் அந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
இதையும் படிங்க: சென்னை மாமன்ற கூட்டத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பிய கவுன்சிலர்கள்..!
தென்கரைக்கோட்டையில் மது கடை அமைக்க வேண்டும், இங்கு மதுக்கடை இல்லாததால் சட்டவிரோதமாக சிலர் கடைகளில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் தங்களுக்கு அன்றாடம் வரும் வருமானத்தில் பாதி அளவு செலவாகி விடுகிறது. எனவே அரசு மதுபானக் கடை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்து, காவல் ஆய்வாளரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மது கடை வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மதுக்கடை வேண்டும் என்கிறவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுக்கடை வேண்டாம் என்று சொல்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் கடைகளை முதலில் மூட வைக்க வேண்டும்.
ஆனால் அரசு மதுபான கடை வந்தால் சட்டவிரோதமாக இயங்கும் கடைகளில் விற்பனை பாதிக்கப்படும் என்பதற்காக திட்டமிட்டு செய்கிறார்கள் என தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவாது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தென்கரைக்கோட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வேலூரில் 3 பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானை.. போராடி பிடித்த வனத்துறை!