சுதந்திர போராட்ட வீரரான தியாகி சுப்பிரமணிய சிவாவின் 94ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் உற்ற நண்பரான சுப்பிரமணிய சிவா சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடியவர்.
அதன் காரணமாக பல ஆண்டுகாலம் கடும் சிறை தண்டனை அனுபவித்த அவர், அங்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையான பின் பாரத மாதவுக்கு கோவில் அமைக்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தனது இறுதிக்காலத்தில் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதபுரம் பகுதியில் வசித்தார்.
உடல் நலக்குறைவால் 1925ஆம் ஆண்டு மறைந்த சுப்ரமணிய சிவா, பாரத மாதா கோவிலுக்காக வாங்கிய நிலத்திலேயே புதைக்கப்பட்டார். அவரின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைத்ததுள்ளது.
சுப்பிரமணிய சிவாவின் பிறந்தநாளான இன்று தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தியாகி சுப்பிரமணிய சிவாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசு மேல்நிலைப்பள்ளியில் அவரின் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுப்பிரமணிய சிவாவின் அரசியல் ஆசானான பால கங்காதர திலகருக்கும் இன்று பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.