சென்னையில் இன்று (டிச. 01) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தருமபுரியிலிருந்து 26 பேருந்துகள் மூலம் பாமகவினர் சென்னையை நோக்கி நேற்று (நவ. 31) இரவு புறப்பட்டுச் சென்றனர். அப்போது தருமபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலம் பகுதியில் காவல் துறையினர் பாமகவினர் சென்ற பேருந்துகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை அனுப்பிவைத்தார். இதனால் காரிமங்கலம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.