கடந்த வாரம் ஏற்பட்ட ஆம்பன் புயல் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்தப் புயலின்போது தருமபுரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டின் மேற்கூரை தகர்ந்து, மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதில் அரூர் அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் சாலையோரம் இருந்த மூன்று மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்து அதன் மின்கம்பிகள் அறுந்து ஆங்காங்கே வயல்களிலும் சாலையிலும் கிடக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின் ஊழியர்கள் மறுநாளே மாற்று வழியில் சரிசெய்து மின்சாரத்தை வழங்கினர். ஆனால் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள், மின்கம்பிகளை அப்புறப்படுத்தாமல் சாலையோரமே விட்டுவிட்டனர்.

இதனால் இரவு நேரங்களில் சாலையில் வருபவர்களுக்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. எனவே ஒரு வாரத்திற்கும் மேலாக சரிசெய்யப்படாமல் உள்ள மின்கம்பங்கள், மின்கம்பிகளை அப்புறப்படுத்தி சீர்செய்து கொடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து அரூர் கோட்ட பொறியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, "ஆம்பன் புயலால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து சேதம் ஆகியுள்ளன. அவ்வாறு சேதமான மின்கம்பங்கள் முழுவதும் சீர்செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.
ஆனால் வாழைத்தோட்டம் கிராமத்தில் மின்கம்பங்கள் விழுந்ததும் உடனடியாகச் சீர்செய்து மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் இன்னும் மாற்றப்படவில்லை என்பது குறித்த தகவல் எனது பார்வைக்கு வரவில்லை. எனவே உடனடியாக மின்கம்பங்களை சரிசெய்து மாற்றியமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பன் கருணையால் ஒகேனக்கல் ஐந்தருவியில் கொட்டும் நீர்!