தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூச்செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவரது மனைவி சின்னராஜி (60). இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகனும், சுமதி (35) என்ற மகளும் உள்ளனர். மகன் ராமசாமி பூச்செட்டி கிராமத்தில் கடை வைத்து இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்துவருகிறார்.
பணம் கேட்டு தகராறு
மெக்கானிக் ராமசாமியின் தாயார் பெயரில் இருந்த நிலத்தின் ஒரு பகுதியை மகன், மகளுக்கு கொடுத்துள்ளார். தனக்குக் கொடுத்த நிலத்தில் சுமதி புதிதாக வீடுகட்டி வந்தார். இந்நிலையில் மெக்கானிக் ராமசாமி தானும் புதிய வீடுகட்ட வேண்டும் என்று தனது தாயிம் பணம் கேட்டு, அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 5) குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராமசாமி தனது தாயிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொலை
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமசாமி தனது கடையிலிருந்த இரும்புக்கம்பியால் தாயைத் தாக்கியுள்ளார். அவரது அலறல்கேட்டு தடுக்கவந்த தந்தையையும் அதே கம்பியால் அடித்துள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டுவந்த பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து மெக்கானிக் ராமசாமி இண்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பணம் கேட்டு பெற்ற தாய், தந்தையையே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.