கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி எம்.பி செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் திருப்தி அளிக்கிறது. இங்குக் கரோனா சிறப்பு பரிசோனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புடன் வருவோரை அழைத்து வர தனி வாகனம் உள்ளது. அந்த வாகனத்தில், வரும் நபர்கள் சிறப்பு பரிசோதனை மையத்தில், தெர்மல் ஸ்கேன் மூலம் காய்ச்சல் பரிசோனை செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்படுகிறார்கள். அங்கு 100 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவு தயார் நிலையில் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் கூடுதலாக தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி விடுதி, கலை கல்லூரி கட்டிடங்களில் கூடுதல் வார்டுகள் தயார் செய்து கொள்ளலாம்.
தருமபுரியில் வெளி மாநிலங்களில் வியாபாரத்துக்கு சென்று வந்தவர்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறிந்து அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்படும். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை. இருப்பினும், சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அவ்வப்போது கைகளை சோப்பு உள்ளிட்டவற்றால் கழுவ வேண்டும்.
அரசின் உத்தரவை மதித்து, பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பதோடு, மிகுந்த விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா