தர்மபுரி வள்ளல் அதியமான்கோட்டை வளாகத்தில், இன்று (செப்.22) தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அதிநவீன நூலகங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட தர்மபுரி எம்.பி. செந்தில் குமார், ’இனிமேல் என்னை இதுபோன்ற விழாக்களுக்கு அழைக்காதீர்கள்’ என்று கடிந்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றபின், திமுக ஒன்றியச்செயலாளர் சண்முகம் என்பவரை அழைத்த தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், 'இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடாதீர்கள். இது அரசு நிகழ்ச்சி. அனைவருக்குமான நிகழ்ச்சி. ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால், என்னை கூப்பிடாதீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்னை செய்ய வேண்டுமா?' எனக் கூறினார்.
ஏற்கெனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியின் ஆலாபுரம் ஏரியில், சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஜூலை 16ஆம் தேதி நடந்த பூமி பூஜையில் “இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்தவ ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தில் இமாம் எங்கே? என்றவாறு பல கேள்விகளுடன் கடுமையாக விமர்சித்து, அதை தவிர்த்த தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் இன்று அதியமான்கோட்டை வளாகத்தில் நடந்த நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றுள்ளார்.
இறுதியாக, 'தன்னை ஏன் இதுபோன்ற விழாக்களுக்கு அழைத்தீர்கள்' என திமுக நிர்வாகிகளிடம் காட்டம் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!