தருமபுரி: மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இம்ரான் தாஜூன் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் வசித்து வருகின்றனர். இந்த சுடுகாட்டில் இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் பணிகளைச் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்.
இவர்களின் இளைய மகள் ரஜ்ஜியாவின் கணவன் ரபீக் உயிரிழந்த நிலையில் அவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் வீடு பழுதான நிலையில் சிறிய வீட்டிலேயே 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினருக்கு போதிய இட வசதியும், வருமானமும் இல்லாமல் தவித்து வந்தனர்.
அதனை அறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் சுடுகாட்டில் வாழும் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். அப்பொழுது இம்ரன் மற்றும் மகள் ரஜ்ஜியாவின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு உதவித் தொகை வழங்குவதற்கும், இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து ரஜ்ஜியாவிற்கு வருமானத்திற்காக வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக இம்ரான் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் இம்ரான் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.