தருமபுரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் ராஜசேகர் என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அவர் பாலக்கோடு கடைவீதி பகுதியில் கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சில நண்பர்களோடு சேர்ந்து தேர்தல் பரப்புரை செய்தார்.
தருமபுரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் டாக்டர் செந்தில்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் தேர்தல் களம் காண்கின்றனர்.
இந்த பரபரப்பான தேர்தல் களத்தில் மற்ற அரசியல் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து கொடி தோரணங்கள் கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கமலஹாசனின் மநீம கட்சியின் வேட்பாளர் ராஜசேகர் எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாக வாக்காளர்களை சந்தித்து வருவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.