தருமபுரி மாவட்டம் வெள்ளோலை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி புவனேஸ்வரி (13), குத்துச் சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். இந்நிலையில், சென்ற வாரம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 25 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட புவனேஸ்வரி, போட்டியில் வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற புவனேஸ்வரி இன்று காலை தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் சென்னையிலிருந்து தருமபுரி வந்தார். அவரை கிராம மக்கள் திரளாக ஒன்றுகூடி நின்று மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, பள்ளி மாணவிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.