தருமபுரி: அதியமான் கோட்டை அருகே மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கில் இருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் இன்று (மே 31) காலை, தருமபுரியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, “7 ஆயிரம் டன் நெல் காணாமல் போனதாக வந்த செய்தியின் அடிப்படையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் தலைமையில் தர நிர்ணய அதிகாரிகள் மற்றும் விஜிலென்ஸ் உயர் அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு செய்தனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில் டெல்டா பகுதியில் இருந்து 11 வேகன் மூலமாக 22 ஆயிரத்து 273 மெட்ரிக் டன் நெல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரத்து 174 மெட்ரிக் டன் நெல் அரவை மில்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 98 மெட்ரிக் டன் மீதம் இருக்கிறது. இவை 130 குவியல்களாக (ஸ்டாக்) அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு குவியலில் சரியாக அடுக்கினால், 2 ஆயிரத்து 962 மூட்டைகள் அடுக்க முடியும். இங்கு 3 ஆயிரம் மூட்டை என்ற அளவில் அடுக்கி இருக்கிறார்கள். இதில் 122 குவியல்கள் முழுமையாகவும், 8 ஸ்டாக்குகள் பாதியாகவும் இருக்கும். அது சரிந்து இருக்கிறது. சரிந்த மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
100 பணியாளர்கள் 120 லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. முழுமையாக அரவைக்கு அனுப்பப்படும். அவ்வாறு அனைத்து மூட்டைகளும் அனுப்பப்பட்ட பிறகுதான், 7 ஆயிரம் டன் நெல் மாயமானதா இல்லையா என தெரிய வரும். இதன் முதற்கட்ட விசாரணையில் 7 ஆயிரம் டன் நெல் மாயமாகவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
100 சதவீதம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 100 சதவீத தணிக்கைக்குப் பிறகுதான் உண்மைத் தன்மை தெரிய வரும். பெரிய அளவில் மூட்டைகள் மாயமாகவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல் மூட்டை மாயமானது குறித்து சென்னைக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை செய்வதற்காக ஒரு குழு வந்துள்ளது.
விசாரணை செய்யும்போது சில மூட்டைகள் சரிந்துள்ளது. 7 ஆயிரம் டன் நெல் அரவைக்கு சென்றதை மாற்றி மாயமானதாக தகவல் மாறி பரவியதா என்பது பற்றி தெரியவில்லை” என தெரிவித்தார். மேலும், நெல் குடோன் பகுதியில் போதிய மின்விளக்கு வசதி மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம்.? கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி!