தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இன்று தருமபுரி உழவர் சந்தை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உழவர் சந்தையில் இரண்டு குழந்தைகள் முகக்கவசம் அணியாமல் இருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு முகக்கவசத்தை அணிவித்தார். மேலும் அவர்களது பெற்றோரை அழைத்து முகக் கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும் என அவர்களிடம் எடுத்துரைத்தார்.
தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது உணவுத் தின்பண்டங்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.
பேருந்து நிலையத்தில் பூ விற்பனையாளர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் பூ விற்றுக்கொண்டிருந்தார். அதைக் கவனித்த ஆட்சியர் அவருக்கு அபராதம் விதித்து கவசத்தை வழங்கினார்.
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனப் பேருந்தில் ஏறிச் சென்று பயணிகளுக்கு அறிவுரை கூறினார்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுசெய்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார்.